
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டார். இதற்கு ஊதியமாக வழங்கும் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை, தனது ஏ. ஆர். ஆர். அறக்கட்டளைக்கு நேரடியாகச் செலுத்தும்படி ரஹ்மான் கூறியுள்ளார்.
இதன்மூலம், வருமான வரி செலுத்துவதைத் தவிர்க்க ரஹ்மான் முயற்சித்ததாகக் கூறி, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையில், ரஹ்மான் தரப்பு விளக்கத்தை ஏற்று, விசாரணையைக் கைவிட்டு முதன்மை ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.
கடந்த 2019 செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.