பொள்ளாச்சி பாலியல் வழக்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதை.தொடர்ந்து, விசாரணை நடத்திய சிபிஐ கடந்த மே மாதம் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
![pollachi incident coimbatore district court change cbi](http://image.nakkheeran.in/cdn/farfuture/NOrnuFbqXrVPJaMcWYtM3T0JxzUHUXuUDFG5BHSJ4n0/1580326289/sites/default/files/inline-images/polachi4.jpg)
இந்த வழக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்காக சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட 5 பேரும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல் 5 பேருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இருப்பதால், இவ்வழக்கை அந்த நீதிமன்றத்துக்கு மாற்றி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டார். மேலும் 5 பேரின் நீதிமன்ற காவலை வருகின்ற 11- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையும் ஒத்திவைத்தார்.
இதனிடையே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஐந்து பேரின் குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.