
ஊரடங்கு காரணமாக டாஸ்டாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர். அதனை போலீசார் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, மாவட்ட டெல்டா தனிப்பிரிவு போலீசார் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை, கடந்த 45 நாட்களில் நடத்தப்பட்ட மதுவிலக்கு வேட்டையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37,865 லிட்டர் சாராய ஊறல், 15,947 லிட்டர் சாராயம், 193 லிட்டர்கள், 3,969 லிட்டர்கள் மற்றும் பல்வேறு கொள்ளளவு கொண்ட மதுபாட்டில்கள் என மொத்தம் 65,825 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.
சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான மூலப்பொருளான வெல்லம் 250 கிலோ, கடுக்காய் 1400 கிலோவும், சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனம் 2, நான்கு சக்கர வாகனம் 2 என பறிமுதல் செய்யப்பட்டு 737 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 654 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.