திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் குளத்துப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மணிமாறன் வீட்டிற்குள் சென்ற போது வீட்டிலுள்ள வீட்டு உபயோக பொருட்களான கட்டில், மெத்தை, சோபா, பிரிட்ஜ், ஃபேன், மிக்ஸி, இன்வெர்ட்டர் என சகலமும் திருடப்பட்டு வீட்டை துடைத்து வைத்தது போல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை விட கொடுமை என்னவென்றால் பூஜை அறையில் இருந்த விநாயகர் படத்தை கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக மணிமாறன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணிமாறன் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒன்றான இணையதள மோடம் செயல்பட தொடங்கியுள்ளதை அறிந்து விசாரணை துரிதமாக மேற்கொண்ட போலீசார், நிலக்கோட்டை பொட்டி செட்டிபட்டியை சேர்ந்த பெருமாள், அவனது கூட்டாளியான சிலுக்குவார்பட்டி ரவி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ஆவாரம்பட்டியை சேர்ந்த சுப்புகாளையை போலீசார் தேடி வருகின்றனர். சூரியா படமான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக கருணாஸ், நீதிபதி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் திருடி லாரியில் ஏற்றி கொண்டு போவது போல் நடித்திருப்பார். அதேபோல் மணிமாறன் வீட்டில் திருடிய பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றி லொடுக்கு பாண்டிகள் கொண்டு சென்று இருக்கிறார்கள். இப்படி சினிமா பாணியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட லொடுக்கு பாண்டிகளிடமிருந்து கொள்ளை பொருட்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.