ஒகி புயலால் கன்னியாகுமரியில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு!
ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. சூறைக்காற்று வீசுவதால் கிராமங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. இவ்வாறு வீடுகளின் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததில் இதுவரை நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகிலுள்ள பரளியாறு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 27 வயது இளைஞர் விமல் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. புயல் காரணமாக அம்மாவட்டத்தில் முழுவதுமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.