Skip to main content

“ஆசிரியை குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்” - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

Published on 20/11/2024 | Edited on 20/11/2024
Teacher family should be given relief and government job says Tamil Nadu Teacher Development Association

மல்லிபட்டினம் அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியை பள்ளியிலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து படுகொலை செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியை குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் எனத்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி  ஆசிரியை  ரமணி படுகொலைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தி படுகொலை செய்த  கொடுஞ்செயலுக்குக்  கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். 

பள்ளியையும், பள்ளிச்சூழலையும்  பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் பொதுமக்களின் கடமையாகும். இது போன்ற கண்ணியமற்ற செயல்கள், அரசுப்பள்ளிகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும் என்பதால் இது போன்ற வன்செயல்களை கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி உரியத் தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின்  மனநிலையை முற்றிலும் பாதிக்கும் இதுபோன்ற செயல்கள் தொடராத வண்ணம் அரசு அனைத்து பள்ளிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளியளவிலும் வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். 

கடந்த பல ஆண்டுகளாக  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி வரும் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தினை வரும் கூட்டத்தொடரிலேயே வரைவு செய்து சட்டப்பேரவையில் முன்மொழிப்பட்டு விரைவில் சட்டம் இயற்ற வேண்டும். அரசுப் பள்ளியின் மீது அக்கறையுடன் தற்காலிக பணிக்கு சம்மதித்து பணியாற்றிய ஆசிரியையின் குடும்பத்தினரின் துயரினை துடைக்கும் வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்