Skip to main content

‘நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது’ - முதல்வர் வேதனை!

Published on 20/11/2024 | Edited on 20/11/2024
CM agony Uncertainty prevails

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்களுடன் சேர்த்து 14 இந்திய மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி (03.01.2024) குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது  பாகிஸ்தான் கடற்படையினரால் 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் இன்று (20.11.2024) எழுதியுள்ளார்.

இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “14 இந்திய மீனவர்கள் (7 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்) இரு இயந்திரப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது 03.01.2024 அன்று பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ எவ்விதத் தகவலும் இல்லை.

மேலும், மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால் அவர்களைச் சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்டகாலமாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி இயந்திரப் படகுகளையும் விடுவிக்க உறுதியான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி (24.10.2024) எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மீனவர்கள் 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 4 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மீதமுள்ள 12 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்