Skip to main content

பைக் திருட்டுக்குப் பின்னால் இருந்த பகிர் உண்மைகள்; பலே கில்லாடி சிக்கிய கதை!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Facts Behind Bike Theft; The story of theaf trapped!

 

விருத்தாசலத்தில் தொடர் நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் அளவை குறைவாகக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்ததால் நகைகளின் உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

விருத்தாசலம் நகர பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. விருத்தாச்சலம் பெரியார் நகர் சிவா என்பவர் வீட்டில் 40 பவுன் நகை, என்.எல்.சி அதிகாரி ஒருவர் வீட்டில் 50 பவுன் நகை, பெரியார் நகர் தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் உள்ளிட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. கடந்த 5 ஆம் தேதி இரவு விருத்தாசலம் பெரியார் நகர் சம்பங்கி வீதியில் ஒரு வீட்டினை உடைக்கும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். உடன் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளும் வீட்டை உடைக்க தேவையான சுத்தியல் உள்ளிட்ட பொருட்களும் அங்கு கிடந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். தொடர் கொள்ளை தொடர்பாக தனிப்படை அமைத்து தேடினர்.

 

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி பதிவுகளை எடுத்த போலீசார் அவற்றைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே தன்னுடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை எனக் கூறி ஒருவர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வந்தார். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் குணா (வயது 31) என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக விருத்தாசலம் பெரியார் நகரில் பூட்டியிருந்த வீடுகளை கண்காணித்து இரவு நேரத்தில் அந்த வீட்டிற்கு தனியாகச் சென்று அந்த வீடுகளை உடைத்து வீடுகளில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்ததாகவும், விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு சில நகைக்கடை, வட்டிக்கடையில் பாதி விலைக்கு நகைகளை விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தான் திருடிய நகை பணத்தை கொண்டு விருத்தாசலம் பூதாமூரில் புதிய மெத்தை வீடு கட்டி உள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் நடத்தியதாகவும், சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டார்.

 

Facts Behind Bike Theft; The story of theaf trapped!

 

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 45 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் கொள்ளை அடித்த பணத்தில் கட்டப்பட்ட வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஆகிய இரண்டு சொத்துக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும், குணா கொள்ளையடித்த நகைகளை விற்ற விருத்தாசலம் கடைவீதியில் உள்ள சரஸ்வதி வட்டிக் கடையின் உரிமையாளர் கண்ணாரம் அவரது மனைவி சுகன்யா அவரது உறவினர் மனோகர் மற்றும் செந்தில் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்தி மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை போன 7 சம்பவங்களில் தொடர்புடையவர் குணா என்பதும் மேலும் அவர் மீது நெய்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

 

தனிப்படை போலீசார் குணாவை கடந்த 5 நாட்களுக்கு மேலாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர் தான் கொள்ளையடித்து விற்பனை செய்ததாக கூறப்பட்ட பல்வேறு நகைக்கடைகள், வட்டிக்கடைகளுக்கு சென்று சுமார் 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சில வட்டிக்கடை, நகைக் கடை உரிமையாளர்கள் தாங்கள் குணாவிடம் இருந்து வாங்கிய நகைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்காததால் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப் போவதாக தெரிகிறது. அதேபோல் பெரியார் நகர் பகுதியில் திருடு போன நகைகளின் அளவு 100 சவரனுக்கு மேல் இருக்கும். ஆனால் 100 சவரன் நகைகளை குணாவிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் வெறும் 45 பவுன் மட்டுமே அவரிடமிருந்து பறிமுதல் செய்ததாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பெரியார் நகர் பகுதியில் தங்கள் நகை பணத்தை பறிகொடுத்த மக்கள் எப்படியாவது தங்களுக்கு நகை மற்றும் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் குறைவான அளவு நகைகளையே குணாவிடம் இருந்து பறிமுதல் செய்திருப்பதாக போலீசார் கூறுவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட குணாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்து அவர் கொள்ளையடித்து விற்பனை செய்த அனைத்து நகைகளையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்