
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அதே சமயம், சூர்யாவின் கங்குவா படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வந்தாலும் படத்திற்கு ஆதரவான குரலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலைப்பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு யோகநரசிம்மர் கோயிலுக்கு இன்று வருகை தந்து மலை மீதுள்ள லக்ஷ்மி நரசிம்மர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டார்.

அப்போது மலையடிவாரத்தில் இருந்து படக்குழுவினருடன் ரோப்காரில் மலைக் கோயிலுக்கு சென்று அமிர்தவல்லி தாயார் மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மரை தரிசனம் செய்து கோயில் நிர்வாகத்தின் சார்பாக நடிகர் சூர்யா , இயக்குநர் சிவாவிற்கு மாலை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தரிசனம் முடிந்து மீண்டும் ரோப் காரில் திரும்பிச் சென்றனர். சாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் சூர்யாவுடன் கோயில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.