
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீனவர்கள் நிறைந்த கடற்கரை கிராமம் மல்லிபட்டினம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த ரமணி(26) என்பவர் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று(20.11.2024) காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரமணி +1 வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்த தொடங்கும் போது அங்கு வந்த சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார்(28) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் ஆழமாக குத்த மாணவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டதும் மாணவர்கள் கதறிக் கொண்டு ஆசிரயையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தூக்கிச் சென்றனர். ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியில் ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மதன்குமாரை அங்கிருந்தவர்களே பிடித்துக் கொண்டனர். உடனே சேதுபாவாசத்திரம் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலிசார் பள்ளிக்கு வந்து மதன்குமாரை கைது செய்தனர். “நான் ரமணியை காதலித்தேன்; இப்போ என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கத்தியால் குத்தினேன்..” என்று முதல்கட்ட விசாரணையில் கூறியுள்ளார்.
பள்ளி ஆசிரியை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியை ரமணி உடல் வைக்கப்பட்டுள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆசிரியை ரமணியின் உறவினர்களும் பொதுமக்களும் குவிந்துள்ளனர். மாணவர்களும் உறவினர்களும் கதறி அழுது வருகின்றனர்.
இந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியை குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், நடந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சம்பவம் நடந்த பள்ளியில் ஆய்வு செய்து நடந்த சம்பவம் குறித்துக் கேட்டுள்ளார். மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் விசாரணை செய்து வருகின்றனர்.