மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களை வெளியேற்ற அதிகாரிகள் ஆயத்தப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த மலைராஜன், மணி ஆகிய 258 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மதுரை விமான நிலையம் விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு பகுதி மக்களை வலுக்கட்டாயமாக மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுகிறது. உரிய நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. தங்களுக்கான மீள் குடியமர்வு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இழப்பீட்டுத் தொகையும் குறைவாக இருக்கிறது. எனவே எங்களை தற்பொழுது வெளியேற்ற எந்த நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி மாலா முன்பு என்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்கள் குறித்து விரிவாக அவர் தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அதையடுத்து 'இந்த விவகாரத்தில் தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் பிரிவின் படி முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றியே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது' என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து நீதிபதி மாலா உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு தொடர்பாக தமிழக நிலம் கையகப்படுத்தும் பிரிவின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வடக்கு டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.