மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று (20.11.2024) காலை 07.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலோடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கதேஹரி, கர்ஹால், மீராபூர், காசியாபாத், மஜவான், சிசாமாவ், கெய்ர், புல்பூர் மற்றும் குந்தர்கி ஆகிய 9 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வைத்த குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் ஆணையம் 7 காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த வாக்காளர்களின் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை போலீசார் சரிபார்த்தாக கூறப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று தெரிவித்ததாவது, ‘வாக்காளர் அட்டைகள் மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை சரிபார்க்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். ஆதார் அடையாள அட்டைகள் அல்லது அடையாள அட்டைகளை சரிபார்க்க போலீசாருக்கு உரிமை இல்லை’ என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியினர் புகார்களின் அடிப்படையில் வாக்காளர் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 7 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது, ‘தகுதியுள்ள எந்த வாக்காளரும் வாக்களிப்பதைத் தடுக்கக் கூடாது. வாக்களிக்கும் போது எந்தவிதமான பாரபட்சமான அணுகுமுறையும் பொறுத்துக் கொள்ளப்படாது. புகாரைப் பெற்றால், உடனடி விசாரணை நடத்தப்படும். யாரேனும் தவறு செய்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது.