கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை மற்றும் பெரியூர் பகுதிகளில் முதலைக் கறி விற்பனை ரகசியமாக விற்கப்படுகிறது என ரகசிய தகவல் வனத்துறைக்கு வந்து சேர்ந்தது.
வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குழுவாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியூரில் ராஜன், மாரியப்பன் என்கிற இருவரும் சேர்ந்து ஒரு முதலைக் குட்டியின் தோலை உரித்து கொண்டிருந்தனர். வனக்காவலர்கள் தங்களை சுற்றிவிட்டதை அறிந்த மாரியப்பன் தப்பி ஓடிவிட ராஜன் மட்டும் மாட்டிக் கொண்டார்.
அவரை விசாரித்ததில்... பவானி ஆற்றில் மீன் பிடிக்க வலை வீசினோம். அந்த வலையில் இந்த முதலை சிக்கிக் கொண்டது. அதை இரண்டு பேரும் சேர்ந்து கொன்று சமைத்து சாப்பிடுவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தோம். ஆனால் அதற்குள் உங்களிடம் பிடிபட்டு விட்டேன் என்றிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜன், மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தப்பி ஓடிய மாரியப்பனை போலீசார் தேடிவரும் நிலையில் முதலைக் கறி விசயம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.