கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ரூபநாராயணநல்லூர் ஊராட்சியில் கடந்த 2001- ஆம் ஆண்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சமூக மக்களும் ஒரே இடத்தில் வாழ்வதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் 100 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அக்கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தினக்கூலிகளாக மங்கலம்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு சென்று வேலைக்கு செய்து வருகின்றனர்.
18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் மறு சீரமைப்பு செய்யப்படாததால் பெரும் பகுதி சேதமடைந்துள்ளன. மோசமான நிலையில் உள்ள மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் அவ்வப்போது இடிந்து விழுந்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததை பார்த்து தனது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஒடியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதேபோல் அடிக்கடி விபத்து நிகழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் மழை பொழியும் போது மேற்கூரை வழியாக தண்ணீர் வீட்டிற்குள் வருவதால் பாத்திரங்களை வைத்து மழை தண்ணீரை பிடிக்கும் அவல நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோல் சமத்துவபுரம் வீடுகளில் ஆணி கூட அடிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு ஆணி அடிக்க முற்பட்டால் சுவர்களில் விரிசல் எற்படுவதாகவும் கூறுகின்றனர். சமையல் செய்யும் போதும், இரவு நேரங்களில் தூங்கும் போதும் உயிருக்கு எவ்வித உத்திரவாதம் இல்லாமல் இருப்பதாகவும், தினந்தோறும் அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறும் அப்பகுதி மக்கள் தமிழக அரசு தங்கள் வீடுகளை புணரமைத்து தரமான, வலுவான வீடுகளை கட்டித்தர வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.