
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாடச் செல்லும் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் ஏரி குளங்களில் மூழ்கி இறப்பது தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது. அதைப்போன்ற சம்பவம் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லெனின். இவரது மகன் ஐந்து வயது கவின். அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராயர், இவரது எட்டு வயது மகன் சஞ்ஜய். இந்த இரு சிறுவர்களும் நேற்று (15.04.2021) மாலை அதே பகுதியில் உள்ள கொக்கட்டை ஏரிக் கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். மாலை 5 மணி அளவில் இருவரும் ஏரியில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். தற்செயலாக அப்பகுதியில் சென்றவர்கள், இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் மிதப்பதைப் பார்த்துக் கூச்சலிட்டுள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுவர்களை மீட்டு, கரைக்குத் தூக்கிவந்து பார்த்தபோது அவர்கள் இறந்துபோனது தெரியவந்துள்ளது. இதுபோன்று விளையாடும்போது அவர்களை அறியாமலேயே சிக்கலில் மாட்டி உயிர் துறக்கிறார்கள் குழந்தைகள். எனவே பிள்ளைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.