Skip to main content

என்ஐஏ சோதனை; சாட்டை துரைமுருகன் வீட்டில் இருந்து ஆவணங்கள் பறிமுதல்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
 NIA Documents seized from the house of Chattai Duraimurugan

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள்  இன்று சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்ஐஏ அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரை முருகனின் மனைவி மாதரசியிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மாதரசியிடம் சாட்டை துரைமுருகன் பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும் கூறப்படுகிறது. அதே போன்று சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் என்பவர் வீட்டிலும் நடைபெற்ற என்ஐஏ சோதனையும் நிறைவடைந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 7 புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையும், ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனையும் நிறைவடைந்துள்ளது. ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து ஒரு லேப்டாப், இரண்டு செல்போன், நான்கு மெமரி கார்டுகள், ஒரு சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.