![cuddalore district thittakudi wife passes away due to dowry problem ...! Jail for husband ...!](http://image.nakkheeran.in/cdn/farfuture/McZrciNvoZLaBxTwhnVBJzwge8ZzpPOoPkos6GM4X9o/1604733814/sites/default/files/inline-images/jail-std_1.jpg)
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் சுலோச்சனா. இவரும் கோவிலூரை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது 3 பவுன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை சுலோச்சனாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.
ஆனாலும் வரதட்சணையாக பைக் வேண்டும் என கேட்டு மணிகண்டன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சுலோச்சனாவை தாக்கியதாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதே போல் அடிக்கடி வரதட்சணை கேட்டு தகராறு செய்வதும், பின்னர் சமரசம் ஏற்படுவதுமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த சுலோச்சனாவின் வளைகாப்பின்போது பைக் வாங்கித் தருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும் மணிகண்டன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் 08.12.2016 அன்று கர்ப்பிணியாக இருந்த சுலோச்சனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுலோச்சனா சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா வழக்கில் ஆஜராகி வாதாடினார். வழக்கினை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் மணிகண்டனை குற்றவாளியாக அறிவித்து 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.