Skip to main content

மது பாட்டிலுக்காக விவசாயி கொலை! கோவில் பூசாரி பரபரப்பு வாக்குமூலம்! 

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

cuddalore district panruti farmer incident police investigation

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பத்திலுள்ள முந்திரி தோப்பின் நடுவே அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊரணி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒரு சிலருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 

இந்நிலையில் கடந்த (09/09/2020) அன்று கோயிலில் படையல் வைக்க ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கோயில் முன் மர்மநபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். அவர் நடுமேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. 43 வயதாகும் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், விஜயகுமார், விஜயபாரதி என்ற 2 மகன்களும், பிரதீபா என்ற ஒரு மகளும் உள்ளனர். ஜெயந்தி சாலை விபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதனால் மனமுடைந்த ரவி மதுவுக்கு அடிமையாகி, சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில்தான் முந்திரி தோப்பிலுள்ள நொண்டி வீரன் கோவிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்துக் கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிணத்தை கைப்பற்றிய காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் சிவகுரு (24), கோவில் பூசாரி வைரமணி (64) ஆகியோரை கைது செய்தனர்.

 

கைதான கோவில் பூசாரி வைரமணி போலிசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:, "வேண்டுதலுக்காகவும், நேர்த்தி கடனுக்காகவும், அய்யனார் சாமிக்கு மதுபாட்டில்களை வைத்து பக்தர்கள் படைப்பது வழக்கம்.படைத்த மது பாட்டிலை ரவி கேட்டார். ரவிக்கு தராமல் அதே ஊரை சேர்ந்த சிவகுருவுக்கு கொடுத்ததால் தகாத வார்த்தையால் ரவி திட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நானும் சிவகுருவும் சேர்ந்து ரவியை தாக்கினோம்.

 

சிவகுரு தடி மற்றும் குத்து விளக்கினால் தாக்கினார். நான் கோவில் மணியால் ரவி தலையில் அடித்தேன். ரவி மயங்கி விழுந்தான். நாங்கள் போலீசுக்கு பயந்து தப்பிஓடி நடுமேட்டுகுப்பம் சின்னகாட்டுப்பாளையம் வெள்ளவாரி ஓடை அருகில் உள்ள வீரன் கோவில் அருகில் பதுங்கி இருந்த போது எங்களை போலீசார் கைது செய்தனர்" என  அவர் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே சாலை விபத்தில் தாயை இழந்த மூன்று பிள்ளைகளும்,  தற்போது மதுவுக்கு அடிமையான தந்தை கொல்லப்பட்டதால் பெற்றோர் இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

மது கேட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்