கடலூர் முதன்மை சார்பு நீதிபதி அன்வர் சதாத் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், "கடலூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விபத்து தொடர்பான வழக்கில் மனுதாரர்களான லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 3 லட்சத்து 86 ஆயிரத்து 106 ரூபாயை பாலூர் கனரா வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விபத்து வழக்கிலும் மனுதாரர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 5 லட்சத்து ஆயிரத்து 482 ரூபாயை கடலூர் யூகோ வங்கியில் வைப்பீடாக வைக்கப்பட்டது.
கடந்த 2012 இல் லாவண்யா மற்றும் சரண்யா ஆகியோர் மேஜர் ஆன பின்னர் வழக்கறிஞர் ஜெயசங்கர் மூலம் இழப்பீடு தொகை கோரி மனு செய்ததால், தவறுதலாக 826/03 வழக்கிற்கு பதிலாக 1826/03 ல் உள்ள அதிக தொகையான வட்டியுடன் 5 லட்சத்து 40 ஆயிரத்து 540 ரூபாயை நீதிமன்றத்தை ஏமாற்றி பெற்றுள்ளார்கள். நீதிமன்றத்தில் உதவி சிராஸ்தாரராக பணிபுரிந்து வந்த குணாளன் இதனை தெரிந்து கொண்டு 826/03 வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடிச் சென்று நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்ற ஒரு போலியான கடிதம் தயார் செய்து கடலூர் வண்ணாரபாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியோடு, கனரா வங்கியில் கொடுத்து கடலூர் வண்டிபாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் பெயருக்கு ரூபாய்.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு வரைவோலை பெற்று, அதனை கடலூர் யூகோ வங்கியில் சத்தியமூர்த்தி பெயரில் கணக்கு துவங்கி காசாக்கம் செய்து பணத்தை எடுத்து மூவரும் நீதிமன்றத்தை ஏமாற்றி பயன் அடைந்துள்ளார்கள். அதேபோல் 826/03 வழக்கில் மேலும் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு நீதிமன்றத்தை ஏமாற்றி அந்த பணத்தையும் பெற வேண்டும் என்று வழக்கறிஞர் ஜெயசங்கர் மீண்டும் லாவண்யா மற்றும் சரண்யா மூலம் இழப்பீடு தொகை கேட்டு மனு செய்துள்ளார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவுப்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், காவல் ஆய்வாளர் துர்கா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவு குற்றவாளிகள் சத்தியமூர்த்தி, சிவதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் (31.05.2023) நீதிமன்ற நடுவர் ரகோத்தமன் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த குணாளன் என்பவர் சுமார் ஒரு மாத காலமாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். விரைவில் அவரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார் என கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.