![cuddalore adi perukku](http://image.nakkheeran.in/cdn/farfuture/8KdyezcXmb1VXk4rPeXTIA57oYSFwyIw33-RzK20-W8/1596379446/sites/default/files/inline-images/xzvcxvx.jpg)
கடலூர் மாவட்டத்தில் ஆடி 18 ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு, வெள்ளாறு , மணிமுக்தாறு, தென்பெண்ணை ஆறு ஆகிய ஆறுகளில் புதுமணத் தம்பதிகள், வயதான சுமங்கலிகள் பல்வேறு சடங்குகள் செய்தனர். முளைப்பாறிகளை ஏந்தி ஆற்றுக்கு சென்று, தூய்மையான இடத்தில், பசுஞ்சாணம் மற்றும் ஆற்று மணலால் பிள்ளையார் பிடித்து வைத்து, அவற்றின் முன்னால் முளைப்பாறிகைகளை வரிசையாக வைத்து, பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டினர்.
![cuddalore adi perukku](http://image.nakkheeran.in/cdn/farfuture/UOxKS7Qidd-2B2cQiaQLCMlpucewnbAxy1qRn-jnXcU/1596379506/sites/default/files/inline-images/zxvdxgdg.jpg)
வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுத்ததும், சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொண்டனர். அதன் பின் அவரவர் கொண்டு வந்த முளைப்பாறிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுகின்றனர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன என்பது ஐதீகமாக உள்ளதாக கூறுகின்றனர்.
![cuddalore adi perukku](http://image.nakkheeran.in/cdn/farfuture/Uhe5nXMeYS0sXndUzMkpWmbtKpHF6hayXojUCDBBRfQ/1596379544/sites/default/files/inline-images/cxffdhf.jpg)
இந்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக, ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலி பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றி கொள்கிறார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, திருமண மாலைகளை ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொண்ட பின்னர், புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மாலைகள் உள்ளிட்டவைகளை ஆற்றுநீரில் விட்டனர்.
கரோனா தொற்று காரணமாக அதிகளவு கூட்டம் இல்லை என்று கூறும் முதியோர், " தமிழர்களின் பாரம்பரிய சடங்குகளில் ஒன்றான ஆடிப்பெருக்கை தற்போது பெரிய அளவில் விழாவாக கொண்டாடுவதில்லை" என்று வேதனையுடன் கூறுகின்றனர்.