சென்னையில் மாடு முட்டி சிறுமி காயமடைந்த நிலையில், மாட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.எம்.டி.ஏ. காலனி சாலையில் பள்ளிச்சிறுமி ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சாலையில் நடந்து சென்றபோது, பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென சிறுமியை முட்டி தூக்கி வீசியது. மாடுகளுக்கு இடையில் சிக்கிகொண்ட சிறுமியை மாடுகள் கடுமையாகத் தாக்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, மாட்டை விரட்டி சிறுமியைக் காப்பாற்றினர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் காயத்துடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் விவேக் என்பவர் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், கவனக்குறைவாக இருப்பது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது வெளியில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாடுகளைத் திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கால்நடை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று சிறுமியை முட்டிய மாட்டைப் பிடித்து வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.