கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள விருப்பாட்சியில், அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு கள்ளத்தனமாக மதுபானங்களை தொடர்ந்து விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. அவற்றை உறுதி செய்யும் விதமாகக் கடை எண் 2487 -இல் பெட்டி பெட்டியாக, திருட்டுத் தனமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை இரவு 8 மணியோடு குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டு நடைமுறைபடுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு, விற்பனை நேரத்தை குறைத்துள்ளதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியல் ஒட்டாமல், மது பாட்டில்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதாகவும், நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் செயல்படுவதாக மது அருந்துபவர்கள் கூறுகின்றனர்.
அத்தோடு அல்லாமல் இரவு 8 மணிக்கு மதுவிற்பனை நேரம் முடிந்தும் கால் பகுதி அளவு கடையின் ஷட்டரை திறந்து வைத்துக்கொண்டு அரசுக்கு கணக்கு காட்டாமல் கள்ளத் தனமாக மதுபானங்களை இரண்டு மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கள்ளத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த விற்பனையாளர், மற்றும் மேற்பார்வையாளர் மீது டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மது அருந்துபவர்கள் கூறுகின்றனர்.