'இனி ஓபிஎஸ் பற்றிய கேள்வியே வேண்டாம்' என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமிக்கு மென்மேலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கு இறையருள் வேண்டும் என்பதற்காகவும் இந்த தங்கத் தேர் இழுக்கின்ற பணியை எம்ஜிஆர் மன்றம் சார்பாக நானும் அதன் மூத்த நிர்வாகிகளும் சேர்ந்து மேற்கொண்டோம். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ளவர். ஜாதி, மத பேதத்திற்கு அப்பாற்பட்டவர். உழைப்பின் காரணமாக உயர்ந்த கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் என்ற பொதுவாழ்வை மேற்கொண்டதற்காக இன்று உயர்ந்து கழகத்தின் பொதுச்செயலாளர் என தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற செல்வாக்கை இறைவன் தர வேண்டும் என்று இந்த புனித நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” எனப் புகழ்ந்து தள்ளினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பொன்னையன், “தொண்டர்கள், மக்கள் என அனைவரும் எடப்பாடி பக்கம் உள்ளனர். எனவே இதுபோன்ற கேள்விகளை இனி எழுப்பவே கூடாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் போது ஏன் அவருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். திமுகவில் கூட எங்கள் கட்சியிலிருந்து சென்ற ஏழு பேரும் மந்திரிகளாக இருக்கிறார்கள்” என்றார்.