இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று கோவை வந்தார். இதில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர் அதேபோல் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சிபி.ராதாகிருஷ்ணன் உட்பட பொள்ளாச்சி, நீலகிரி,திருப்பூர், அரூர்,நாமக்கல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ஆனால் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறன் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி நாம் விசாரித்தபோது வெங்கு மணிமாறன் ஏற்கனவே திட்டமிட்டபடி மூலநூர் பகுதியில் வாக்கு சேகரிப்பதாக கூறப்பட்டது.ஆனாலும் பிரதமர் வந்திருந்தபோது கொங்கு மண்டலத்திலுள்ள மற்ற வேட்பாளர்கள் அந்த கூட்டத்தில் ஆஜராகி இருந்த நிலையில் ஈரோடு தொகுதி வேட்பாளர் கொங்கு வெங்கு மணிமாறன் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பது புரியவில்லை.
இது சம்பந்தமாக அதிமுக தரப்பிடம் விசாரித்தபோது ஈரோட்டில் ஜவுளி மற்றும் விவசாயம் சம்பந்தமாக மக்கள் பாதிப்புக்குள்ளான பல்வேறு நெருக்கடிகள் மத்திய பாஜக ஆட்சியில் தொடர்ந்து நடந்தது.இந்த நிலையில் மோடி கூட்டத்தில் கலந்துகொண்டால் மக்களிடம் கடுமையான எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டிவரும் என அதிமுக தரப்பு நினைத்ததால் வேட்பாளர் மணிமாறன் கோவையில் நடைபெற்ற மோடி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆக பிரதமர் மோடி கூட்டத்தில் அதிமுக வேட்பாளரே புறக்கணிப்பு செய்யும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது