
கடந்த சில மாதங்களாக சீனாவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டது. கேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஒரு மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் சிலருக்கும் அவ்வறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனாவில் இருந்து அண்மையில் தமிழகம் திரும்பிய அவர் திருவண்ணாமலையில், கொரானா அறிகுறிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நோயாளி தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயதான அவர், சீனாவில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். வூகான் நகரில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாங்காய் நகரில் பணியாற்றி வந்த அவர், கடந்த 17ஆம் தேதி, தனது மனைவியுடன் தமிழகம் திரும்பினார்.
சீனாவில் இருந்து புறப்படும்போதும், தமிழகம் வந்த பிறகும் விமான நிலையத்திலும் சோதிக்கப்பட்டபோது, அவருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதுமில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக, சளி இருமல் இருந்ததால், அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானாகவே சென்று மருத்துவர்களை சந்தித்துள்ளார். அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதாலும், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததாலும் அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து சீனாவில் இருந்து கடந்த 17ஆம் தேதி அவருடன் 20 பேர் தமிழகம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.