Skip to main content

“முதல்வர் இப்படி நடந்துகொண்டது மரபுக்கு எதிரானது” - எடப்பாடி பழனிசாமி பேட்டி 

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 'It is against tradition for a Chief Minister to sit the governor and speak' - Edappadi Palaniswami Interview

 

இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ட்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

 

சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஆளுநர் உரை என்பது ஆண்டு துவக்கத்திலும், ஒவ்வொரு ஆண்டும் அரசு செயல்படுத்தவுள்ள திட்டங்களையும், கொள்கைகளையும், முடிவுகளையும் சட்டப்பேரவையில் சம்பிரதாயமாக அறிவிக்கும் ஓர் உரை. அப்படித்தான் அது பார்க்கப்படுகிறது. ஆனால், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரையில் புதிய பெரிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த அரசும், முதலமைச்சரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள் எனும் மக்களின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இன்றைய தினம் சற்று வித்தியாசமாக தமிழக ஆளுநர் உரையின் மூலம் தங்கள் முதுகைத் தட்டி சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் பார்க்க முடிகிறது. ஆகவே, மக்களுக்கு இந்த ஆளுநர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இந்த ஆளுநர் உரை வெற்று உரையாக உள்ளது'' என்றார்.

 

'அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் படிப்பார். ஆனால், இன்று சிலவற்றை சேர்த்தும், சிலவற்றை தவிர்த்தும் ஆளுநர் பேசியிருக்கிறார்? திமுக கூட்டணிக் கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்?' என்ற கேள்விக்கு

 

''அரசு, ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு, அது அவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை அவர் ஒப்புதல் அளித்தாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆளுநர் உரையைக் கேட்கத்தான் நாங்க வந்திருக்கிறோம். முதல்வரின் உரையைக் கேட்க வரவில்லை. ஆளுநரை அமர வைத்துக்கொண்டு  முதலமைச்சர் பேசுவது மரபுக்கு எதிரானது'' என்றார்.

 

சட்ட ஒழுங்கு குறித்த கேள்விக்கு ''தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. போதைப் பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்