தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தீவிரமாகப் பரவி வருகிற காரணத்தால், மக்கள் மத்தியில் கடும் அச்சம் உள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் உயிரிழப்புகள், உடல் நல சீர்கேடுகள், பொருளாதாரப் பேரழிவுகளை இந்தியா சந்தித்து வருகிறது.
கடந்த 18 ஏப்ரல் 2020இல் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,013 ஆக தான் இருந்தது. ஆனால் ஓராண்டில் மத்திய பாஜக அரசின் அலட்சியப் போக்கு காரணமாக 6 ஏப்ரல் 2021இல் பாதிப்பின் எண்ணிக்கை 1லட்சத்து 15 ஆயிரத்து 269 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளனர். உலக நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் காரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஒரே நாளில் 4 ஆயிரமாகவும், சென்னையில் 1,500 ஆகவும் உயர்ந்திருக்கிறது. கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் எற்பட்ட உயர்வு காரணமாக மக்களிடையே மீண்டும் அச்சமும், பீதியும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி ஏப்ரல் 6 நிலவரப்படி 8.7 கோடி பேருக்கு போடப்பட்டிருக்கிறது. இதை வைத்துப் பார்க்கிற போது 1 லட்சம் பேரில், சராசரியாக 6,310 பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால் உலகளவில் தடுப்பூசி போட்டவர்கள் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 8,900 ஆக இருக்கிறது. மற்ற நாடுகளை ஓப்பிட்டுகிற போது 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் 50,410, பிரிட்டனில் 54,680 ஆகவும் இருக்கிறது. இந்த நிலையில் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலமே கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முடியும்.
இதை மத்திய அரசு உணர்ந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டுமே தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.