விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள கல்லாலிப்பட்டு கிராமத்தில் இருக்கும் முனீஸ்வரர் கோவிலை அனைத்து பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து முனீஸ்வரர் கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அந்த கிராம மக்கள் ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக முனீஸ்வரர் சிலைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்தது
இந்த நிலையில் இந்த கோவில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சொந்தம் என நீதிமன்றத்தில் சிலர் தடை உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் திருப்பணி தடுத்து நிறுத்தப்பட்டு, ஏற்கனவே சாமி சிலைகளுக்கு பூசப்பட்ட வண்ண பூச்சுகளை மாற்றி வெள்ளை நிறம் பூசப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(11.8.2022) காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முனீஸ்வரர் கோயில் முன்பு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அனந்தபுரம் போலீசார் முனீஸ்வரர் கோவிலுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முனீஸ்வரர் கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் திருப்பணி செய்து கும்பாபிஷே நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததனர் அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கல்லாலிப்பட்டு கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.