![coronavirus vaccine drive festival tamilnadu peoples not interested](http://image.nakkheeran.in/cdn/farfuture/FfbgHimwttZOd9uNNYs9t9rn3t_8AX_uNCiX_UM-JbY/1618488648/sites/default/files/inline-images/corona4443.jpg)
தமிழகம், டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்டு செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, கரோனா பாதிப்புகள், தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை 'கரோனா தடுப்பூசித் திருவிழா' நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தடுப்பூசித் திருவிழாவின் முதல்நாளில் 75,000 பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 75,000 பேர் மட்டுமே போட்டுக் கொண்டனர். கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மக்களிடம் ஆர்வமில்லை. தமிழகத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகள் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்திற்கு 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், கூடுதல் மருந்து கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.