கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளான இன்று, வயதானவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக உதவிக்கு யாருமற்ற முதியோர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறை ஏற்கனவே ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் பெயர் ஹலோ சீனியர்ஸ். வயதானவர்கள், குடும்பத்தினரால் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள், தங்களுக்கு சட்ட ரீதியாக மற்றும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் இந்த திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் போலீசார் நேரடியாக அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு என்ன பிரச்சனை என விசாரித்து அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக ஒன்றுதான் இந்த ஹலோ சீனியர்ஸ்.
இத்திட்டத்தை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் தொடங்கிவைத்தலிருந்து, சுமார் நூற்றுக்கணக்கான முதியோர்கள், ஆதரவற்றோர் இதன்மூலம் பயன்பெற்றுள்ளனர். தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு செயலால் ஆதரவற்றவர்கள் இந்த ஹலோ சீனியர்ஸ் திட்ட தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தங்களுக்கு தேவையான உதவிகளை ஈரோடு போலீசாரிடம் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு மருத்துவ வசதி தான் அதிகம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவு மாத்திரைகள் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களிடம் இருக்கிறது. இப்படி போலீசாரை அழைத்து பேசிய பல முதியவர்களுக்கு போலீசாரே நேரில் சென்று என்ன மாத்திரை மருந்து என கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அந்த மருந்து மாத்திரைகளை வீட்டிலேயே சென்று கொடுத்து வருகிறார்கள். இது ஒருவகையில் அர்ப்பணிப்பான செயல் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள் ஈரோடு மாவட்ட காவல் துறையினர்.