கரோனா வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தை மட்டுமல்ல; குடும்ப உறவுகளையும் தனித்தனியாக பிரித்து பரிதவிக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் சென்னைவாசிகளை பரிதவிக்க வைத்திருக்கிறது!
சென்னை முகப்பேரில் கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் சந்தோஷ் குமார் என்பவரது ஐந்து மாத ஆண் குழந்தைக்கு மட்டும் கரோனா நெகடிவ் என்று சோதனையில் தெரிய வந்ததால், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்பேரில், அந்தக் குழந்தையை மற்றொருவரிடம் பராமரிக்க சந்தோஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை, என்.எஸ்.கே. நகரில் உள்ள அவருக்கு தெரிந்த வீட்டுக்கு அந்த குழந்தை அனுப்பப்பட்டு பராமரிக்கப்பட்டது. குழந்தையின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி வீடியோ காலில் சந்தோஷ்குமார் குடும்பத்தினர் அறிந்து வந்தனர். ஆனால், திடீரென இரண்டு நாட்களாக அந்த 5 மாத குழந்தை தொடர்ந்து அழுததால், சந்தோஷ்குமார் குடும்பத்தினர் கலக்க மடைந்தனர்.
இதுபற்றி அறிந்த சந்தோஷ் குமாரின் மாமியார், வேலூரில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து வரவும், தமது வீட்டில் பேரக்குழந்தை சில மாதங்கள் இருந்தால், நன்றாக கவனிக்க முடியும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு ஒப்புக்கொண்ட சந்தோஷ்குமார் குடும்பத்தினர், வேலூருக்கு தமது குழந்தையை அனுப்ப முடிவு செய்து, அதற்கான முயற்சிகளை தொடர்ந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் ட்விட்டர் வழியாக சந்தோஷ்குமார் உதவி கேட்டார்.
தமது குழந்தையை சென்னையில் இருந்து வேலூருக்கு அனுப்ப வாகன வசதி வேண்டும், தயவுகூர்ந்து உதவி செய்யவும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அமைச்சர் வேலுமணி தனது அலுவலகத்தில் இருந்து சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு முழு விவரம் கேட்டறிந்தார். நீங்கள் கேட்ட உதவி உடனடியாக செய்யப்படும் என்று சந்தோஷ்குமாருக்கு உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அனுமதியுடன் வாகனம் அனுப்பப்பட்டு, ஒருவர் உதவியுடன் அக்குழந்தை பத்திரமாக வேலூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டது. அவசர காலத்தில் இந்த உதவி செய்த அமைச்சர் வேலுமணிக்கு ட்விட்டர் வழியாக சந்தோஷ்குமார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். பெற்றோரின் அருகாமை இல்லாமல் பரிதவித்த 5 மாத குழந்தையை அவரது பாட்டி வீட்டில் சேர்க்க அமைச்சர் எடுத்த உடனடி நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகளே மெய்சிலிர்த்திருக்கிறார்கள்.