கடலூரில் பக்ரீத் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித திருநாளான பக்ரீத் திருநாள் நாளை (01.08.2020) உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கரோனா ஊரடங்கு நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளதால், பக்ரீத் கொண்டாட்டம் குறித்து காவல்துறை சார்பில் இஸ்லாமிய சமூகத்தினரிடையே கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் விருத்தாசலம் டி.எஸ்.பி இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டி.எஸ்.பி இளங்கோவன், "கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை கருத்தில்கொண்டு மங்கலம்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மங்கலம்பேட்டை சுற்றியுள்ள எடச்சித்தூர், மாத்தூர், தி.மாவிடந்தல், மு.அகரம், பழையப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு குத்பா தொழுகை நடத்தாமல் அவரவர் வீடுகளிலேயே தொழுது கொள்ள வேண்டும். ஊர்வலமாக செல்வதற்கும் அனுமதி கிடையாது. அதேபோல் இறைவனுக்காக ஆடுகளை அறுத்து பலி கொடுக்கும் குர்பானி நிகழ்ச்சிகளை அவரவர் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ள வேண்டும்" என்றார்.