கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கரோனா வீரியம் பற்றி மருத்துவர்கள் தரும் தகவல் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் கூறுகின்றன. இதனிடைய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.