Skip to main content

சின்னத்தை மாலையாக போட்டுக் கொண்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் கட்சிகளைக் கடந்து ஒரே கட்சியை சேர்ந்தவர்களே பல முனைகளில் போட்டியிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு கட்சி சின்னம் கிடையாது. சுயேட்சை சின்னங்கள் தான். அதேபோல ஒன்றிய குழு, மாவட்டக்குழு உறுப்பினர்களாக சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் சுயேட்சை சின்னங்கள் தான். அதனால் சுயேட்சை சின்னங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் வேட்பாளர்கள் பல யுத்திகளை கையாள வேண்டியுள்ளது.

 

 Vote collecting candidate!


திருவரங்குளம் ஒன்றியத்தில் ஒரு கிராமத்தில் ஒரு வேட்பாளர் கடைவீதியில் நின்ற மக்களிடம்”கண்ணாடிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று சொல்லிவிட்டு செல்ல அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வாக்காளர்.. ஆமா இப்ப ஓட்டுக் கேட்கிறவரும் தேர்தல்ல நிற்கிறாரே அப்பறம் ஏன் பழைய தலைவர் கண்ணாடிக்காரருக்கு ஓட்டுக் கேட்கிறார். இவரு வாபஸ் வாங்கிட்டாரா? என்று கேட்க அந்த இடத்தில் நின்ற பலருக்கும் குழப்பம் வந்துவிட்டது.

அந்த பகுதியில் நின்ற ஒரு இளைஞரிடம் நாம் கேட்க.. இப்ப ஓட்டுக் கேட்டவரின் சின்னம் மூக்கு கண்ணாடி.. அதனால் கண்ணாடிக்கு ஓட்டுப் போடுங்கனு கேட்கிறார். ஆனால் இந்த வாக்காளர்கள் நினைக்கிறது பழைய தலைவர் கண்ணாடி போட்டிருப்பவர். அதனால அவரை கண்ணாடி என்று சொல்வார்கள். அதனால்தான் இவர் கண்ணாடி என்று சின்னத்தை சொல்லும்போது மக்கள் கண்ணாடிக்காரர் என்று புரிந்து கொண்டார்கள். இதில் ஏகப்பட்ட குழப்பம் வரப் போகுது என்று சிரித்துக் கொண்டார் அந்த இளைஞர். இப்படி நகைச்சுவை சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது.

 

 Vote collecting candidate!

 

இன்னொரு பக்கம் தங்களின் சின்னங்களை மக்கள் மனதில் பதிய வைக்க வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் செய்தாலும் கூட கிராம மக்களிடம் எளிமையாக கொண்டு செல்ல புது புது யுத்திகளை கையாளத் தொடங்கியுள்ளளர். அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராமர் என்ற இளைஞருக்கு கொடுக்கப்பட்டுள்ள சின்னம் ”கத்தரிக்காய்”  அந்த சின்னம் மக்கள் மனதில் எளிதில் பதியும் என்றாலும் கூட அந்த சின்னம் யாருடையது என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக கத்தரிக்காய்களை மாலையாக கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டு இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நாங்கள் இப்படி வந்ததை பார்த்து எங்களை கோமாளிகள் போல நினைத்தாலும் எங்கள் சின்னமும், வேட்பாளரும் இந்த வாக்காளர்கள் மனதில் பதிந்துவிடும் அதனால் கத்தரிக்காய் சின்னத்திற்கு வாக்குகள் போடுவார்கள் என்கின்றனர் கூட வந்த இளைஞர்கள்.

இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமாக மக்களை கவர வேட்பாளர்கள் முயற்சிகள் செய்து வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்