தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2- ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் மதுரையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.