![Corona vaccine for the disabled at home!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AQecXfVdhgqjeDmp90dhiteXtwocouQ4J8PmzER7YvU/1622178852/sites/default/files/inline-images/th_974.jpg)
தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கரோனாவின் இரண்டாம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும் கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியையும் தமிழக அரசு பெரும் துணையாக கொண்டு செயல்பட்டுவருகிறது. ஊரடங்கினால், சற்று பயன் கிடைத்துள்ளதாகவும், ஆனால், இன்னும் அதிக பயனை ஊரடங்கு மூலம் எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அதேபோல், தமிழக அரசு தடுப்பூசி திட்டத்தை ஒரு இயக்கமாக நடத்திவருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட கரோனா விழிப்புணர்வு காணொளியில் தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
சேலத்தில், 18 முதல் 45 வயதுவரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை (மே 27) முதல் தொடங்கியுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக தேர்தல் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என இதுவரை 59,846 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24,797 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மே 24ஆம் தேதிமுதல் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக 18 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. முதல் 3 நாட்களில் மட்டும் இவ்வயது பிரிவினரில் 8,296 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த விசேஷ கவனம் செலுத்திவருகிறது சேலம் மாநகராட்சி. அதாவது, 18 முதல் 45 வயதுவரையில் சேலம் மாநகராட்சி பகுதியில் 8,296 பேர் வசிப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வியாழக்கிழமை (மே 27) முதல் தொடங்கியுள்ளது.
முதல் நாளில் மட்டும் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுதேடிச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேரடியாக ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கூறுகையில், ''மாநகர எல்லையில் வசிக்கும் பத்திரிகை விநியோகிப்பாளர்கள், பால் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், மளிகைக்கடை, மருந்துக்கடை பணியாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், மின்வாரியம், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், இ-சேவை மைய பணியாளர்கள், அத்தியாவசியத் தொழிற்சாலை பணியாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள்;
அனைத்து அரசு ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஊடகத்தினர் ஆகியோர் அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆதார் அட்டை அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்'' என்றார்.