![continuous rain; Holidays for schools in three taluks](http://image.nakkheeran.in/cdn/farfuture/C0qyydhNXZQrGyMOBS8ClCA4k1u-lyoKmu5bWDOUIiM/1670810282/sites/default/files/inline-images/N222322_1.jpg)
'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், நாமக்கல், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி தொடர் நீர்வரத்தால் 22.25 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பது குறிப்பிடத்தகுந்தது. வினாடிக்கு 2,046 கனஅடி நீர் வரும் நிலையில் நான்காவது நாளாக 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் காஞ்சிபுரம் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதேபோல் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.