வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தனர்.
இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழில் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சக்சஸ் மீட் நடத்தியது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டபின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அவ்வப்போது ஆகச்சிறந்த படைப்பாளிகள் இங்கு பிறந்துள்ளார்கள். அவர்கள் சிறந்த பங்களிப்பை செய்துள்ளார்கள். வணிகத்தாக்கங்கள் இருக்கும் போது மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் போன்ற படைப்பாளிகள் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். அதுபோல் இந்த தலைமுறையினரில் வெற்றிமாறன், ராம் போன்றோர் சிறந்த படைப்புகளை தந்து கொண்டு தான் உள்ளார்கள். ஒவ்வொரு காலத்திலும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. அது பெரும் எண்ணிக்கையில் நிகழவில்லை.
விடுதலை மாதிரியான படத்தை எடுப்பதற்கு கடும் உழைப்பை கொட்ட வேண்டியுள்ளது. அது வெற்றியால் தான் முடியும். மற்றவர்களால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த காடுகளுக்குள் போய் பூச்சிகளில் கடிபட்டு மலைகளில் ஏறிப்போய் படமெடுப்பது மிகவும் கடினம். வெற்றிமாறன் மனித வடிவத்தில் உள்ள மிருகம். அந்த வெறியில் திரைப்படங்களை எடுக்கிறார். அது பாராட்டத்தக்கது” எனக் கூறினார்.