பள்ளிபாளையம் அருகே, வேலை வாங்கிக் கொடுத்த நண்பனின் தாயாரை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள கருந்தேவன்பாளையத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி மல்லிகா (55). இவர்களுடைய மகன் சண்முகம். இவர், திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய எதிர் வீட்டில் வசித்து வருகிறார் சின்னராசு (30). இவரும், சண்முகமும் நண்பர்கள். வேலை தேடி வந்த சின்னராசு, திருப்பூரில் தனக்கும் வேலை வாங்கிக் கொடுக்கும்படி சண்முகத்திடம் கேட்டுள்ளார். அதன்பேரில், அவரும் சின்னராசுவை திருப்பூருக்கு அழைத்துச் சென்று, தான் வேலை செய்து வரும் நிறுவனத்திலேயே வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அங்கு ஒரு மாதம் மட்டுமே வேலை செய்து வந்த சின்னராசு, திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊருக்கே திரும்பி விட்டார். மேலும், தான் வேலை செய்த நாள்களுக்கு உண்டான பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தருமாறு சண்முகத்திடம் கேட்டுள்ளார். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றுவிட்டதால், சம்பளத்தை பெற்றுத்தர முடியாது என்று சண்முகம் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜூன் 19ம் தேதி இரவு, சண்முகத்தின் வீட்டிற்குச் சென்ற சின்னராசு, அவருடைய தாயார் மல்லிகாவிடம் சம்பளம் தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தார். சாதாரணமாக தொடங்கிய அவர்களுடைய பேச்சு, சிறிது நேரத்தில் வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக உருமாறியது. ஆத்திரம் அடைந்த சின்னராசு, அங்கிருந்த கட்டையை எடுத்து மல்லிகாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து பலத்த காயம் அடைந்த அவர், மயங்கி விழுந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மல்லிகாவை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மல்லிகாவை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் சின்னராசு மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே சின்னராசு, காவல்துறைக்கு பயந்து திடீரென்று தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், உள்ளூரிலேயே ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்த சின்னராசுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.