இராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை, கிண்டி, ஹால்டா அருகில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புழல் மத்திய சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளின் உல்லாச வாழ்க்கை, புகைப்படங்களாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளில் வெளிவந்து சந்தி சிரிக்கும் வேளையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் “சிறைத்துறையில் எதுவும் தப்பாக நடக்கவில்லை” என்கிற ரீதியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் வகுப்பு சிறைவாசிகள் பாத்திரம் வாங்கலாம்; சமைக்கலாம்; சுவற்றில் வண்ணம் அடித்துக்கொள்ளலாம். புழல் சிறையில் அடிக்கப்பட்டுள்ள பெயின்ட்டானது, சிறைத்துறையே வாங்கிக் கொடுத்தது.” என்று ஆச்சரியப்படுத்திய அமைச்சர் “சிறைவாசிகளுக்கு ஃபைன் ஆர்ட்ஸ், கைத்தொழில் போன்றவை கற்றுத் தரப்படுகிறது. அதனால், ஃபைன் ஆர்ட்ஸ் கற்ற முகம்மது ரியாஸ், அவருடைய அறையில் வண்ணம் தீட்டியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?
போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் அவர் (முகம்மது ரியாஸ்) சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சட்டத்திற்கு உட்பட்டு அவருக்கு முதல் வகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேலை நேரம் தவிர, ஓய்வு நேரத்தில் அவர் கலர் உடை அணிந்துகொள்ளலாம். சிறையில் ஏ பிளாக், பி பிளாக் என எல்லா பிளாக்குகளிலும் டி.வி. உண்டு. டி.வி. அங்கு இருப்பதால்தான் செல்போன் அங்கே வருகிறது. (என்னே கண்டுபிடிப்பு?) அதனால்தான், அத்தனை டிவியையும் எடுக்கச் சொல்லிவிட்டேன். சிறையில் செல்போன் புழக்கம் என்பது தவறு (இதையாவது ஒத்துக்கொண்டாரே!). அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை நடத்தில், பல செல்போன்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த சோதனை தொடரும்.” என்றார்.