சென்னையில் நடைபெற்ற 'காலா' பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, திரும்பும்போது ரயிலில் சிக்கி கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ரஜினியின் 'காலா' பட இசைத்தட்டு வெளியீட்டு விழா கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில் மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான காசிவிஸ்வநாதனும் கலந்து கொண்டார். விழா முடிந்த பின் சொந்த ஊர் திரும்புவதற்காக வியாழக்கிழமை சென்னை எழும்பூர் - மதுரை ரயிலில் புறப்பட்ட அவர் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.
சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் மறைமலைநகர் அருகே வந்தபோது காசி விஸ்வநாதனின் கால், நடைமேடையில் மோதி துண்டானது. வலியால் துடித்த அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கால்களை இழந்த ரசிகர் காசி விஸ்நாதனுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி வழங்கியுள்ளார். ரஜினிகாந்த் வழங்கிய நிதியுதவியை காசிவிஸ்வநாதனுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் நேரில் சென்று வழங்கினார்.
மேலும், காசிவிஸ்வநாதன் குணமான பிறகும் தேவையான உதவிகளை வழங்குவதாக சுதாகர் மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.