![Complain to Anyone ... Viral Threatening Audio](http://image.nakkheeran.in/cdn/farfuture/3Piw7PHzYU-YPZNOGeffLH1Wusx2PWN-cSCzuXtG9ho/1641447413/sites/default/files/inline-images/stranger-call-woman.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஏனாதிமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது விவசாயி ரகோத்தமன். இவர் இந்திய விவசாய முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவராக சங்க பணிகளையும் செய்து வருகிறார். இவர் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளார். சமீபத்தில் அபரிதமான மழை பெய்து விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததால் கடனை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் 11 மணியளவில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண் ஊழியர் ரகோத்தமனிடம், ‘தனியார் கம்பெனியை சேர்ந்த ஏ.ஆர்,சியில் இருந்து பேசுகிறேன். நீங்கள் திருவெண்ணைநல்லூர் இந்தியன் வங்கியில் கடன் பெற்று உள்ளீர்கள். அந்தக் கடனை நீங்கள் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்’. அப்போது ரகோத்தமன் இந்தியன் வங்கியில் கடன் பெற்றதற்கு தனியார் கம்பெனியை சேர்ந்த நீங்கள் ஏன் கடனை கட்ட சொல்லி கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர் நீங்கள் கடன் பெற்றுள்ள வங்கி எங்களை வசூல் செய்யச்சொல்லி பார்வேர்ட் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
![safasf](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZfBwW4slHzS8TvVOHpumx66z-zM3FyR37BSohQAWgUo/1641447438/sites/default/files/inline-images/farmer-audio-1.jpg)
மேலும் பேங்க்ல கடன் பெற்ற எங்களை பேங்க் ஊழியர்கள்தான் கடனை கட்டச் சொல்லி கேட்க வேண்டும். நீங்கள், கடன் வாங்கியதற்காக எங்களை மிரட்டுவீர்களா? சாக கூட சொல்வீர்களா. இதை நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப் போகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் ஊழியர் என்னுடைய பெயர் அஸ்வினி யாரிடம் வேண்டுமானாலும் போய் புகார் கொடு. நீ செத்தாலும் பரவாயில்லை கடனை கட்டி விட்டு சாவு என்று கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி ரகோத்தமன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் கடன் பெற்ற ஒரு விவசாயி தனியார் கம்பெனியின் பெண் ஊழியர் செத்தாலும் கடனை வெட்டிவிட்டு சாவு என்று கூறிய இந்த செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.