
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது. காற்றின் வேகம் குறைவு என்றாலும், கடும் மழை சென்னை வாழ் மக்களை நிலைகுழையச் செய்துவிட்டது. நகரில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் சென்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிசை வீடுகளிலும், மாடிவீட்டு கீழ்தளங்களிலும் குடியிருந்தவர்களின் வீட்டில் உள்ள அத்தனை உடமைகளும் நாசமானது. இதனை உணர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னைவாழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனவயல் பாரத் பால் நிறுவனம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைவாழ் மக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் லிட்டர் பாக்கெட் பாலுடன், பாரத் பால் நிறுவன இயக்குநர்கள், ஊழியர்கள் சென்னை சென்று பெரும்பாக்கம் பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், பொதுமக்களுக்கு பால் பாக்கெட் வழங்கியதுடன் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டனர்.