
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது.
கடந்த 3 ஆம் தேதி சென்னையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்குச் சென்றது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து புயல் விலகிச் சென்றதால் சென்னையில் மழை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக கடந்த 5 ஆம் தேதி மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையைக் கடந்தபோது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசி இருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கேரள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென் தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.