தேர்தல் நடத்தை விதிகளின்படி, தனி நபர்கள் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணி திங்கள்கிழமை (மார்ச் 11, 2019) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
சேலம் மக்களவை தொகுதியை பொருத்தவரை 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 லட்சத்து 320 பேர் ஆண்கள்; 7 லட்சத்து 92 ஆயிரத்து 90 பேர் பெண்கள். இதரர் 77 பேர் உள்ளனர். சேலம் மக்களவை தொகுதியில் நகரப் பகுதியில் 161 வாக்குச்சாவடிகளும், புறநகர் பகுதியில் 81 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.
பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவத்தினர் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி தொடர்பான பேனர்கள், கட்சித் தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்ற பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டு உள்ளன. தேர்தல் முடியும் வரை அதுபோன்ற பேனர்கள் வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காகும் செலவுகள், அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.
தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே அரசின் சார்பில் வழங்கப்படும் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடவோ, ஏற்கனவே அறிவித்துள்ள திட்டங்களின் சலுகைகளும் வழங்கவோ கூடாது. அவ்வாறு வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், டோக்கன், அன்பளிப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்படுவதை தடுக்க கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகளின்படி தனி நபர் ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச்செல்லலாம். அதற்கு மேலான தொகையைக் கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அரசியல் கட்சியினர் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துச் செல்லலாம். அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், உடனடியாக பறிமுதல் செய்யப்படும். அத்தொகை, வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தைப் பெற்றுச்செல்லலாம். இவ்வாறு ஆட்சியர் ரோகிணி கூறினார்.