கோவை மாவட்டம் எல்ஐசி பஸ் ஸ்டாப்பில் டிராபிக் போலீஸ் பூத் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் பணியாற்றி வரும் டிராபிக் போலீஸ் ஒருவர் கோவை தமிழில் அழகிய அறிவுரைகளை வழங்கியபடியே வாகன ஓட்டிகளை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த டிராபிக் போலீஸ் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “வண்டி எண் 4724 ல இருக்குற தம்பி நல்ல அழகா சிரிக்கிறடா ராஜா... நிறைய சாங்ஸ் கேளுடா...” என மகிழ்ச்சியுடன் பேசி வாகன ஓட்டிகளை சந்தோஷப்படுத்தினார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் ஹெல்மெட் போடாமல் பைக்கை ஓட்டி வந்துள்ளார்.
இதை கவனித்த டிராபிக் போலீஸ் “டேய் பொடியா ஹெல்மெட் போடு டா... இதுலாம் ரூல்ஸ் டா... உங்க சேஃப்டிக்காக ஃபாலோ பண்ணுங்க. அப்பா அம்மாவுக்கு தெரியாம பைக் எடுத்துட்டு சுத்துறீங்களா...” என்று மிக இயல்பாய் அந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து வாகன நெரிசலில் சிக்கிய சில வாகன ஓட்டிகளிடம் ” முன்னாடி வாங்க, கொஞ்ச நேரத்துல சிக்னல் ஓபன் ஆய்டும்...” என்று பண்புடன் தெரிவித்துள்ளார்.
இதனை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்ட நிலையில் அது தற்போது வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்த இணையவாசிகள் அந்த டிராபிக் போலீஸுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.