மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி மத வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (08.01.2022) கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்த இந்நிகழ்விற்கு ம.ஜ.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், கோவை ராமகிருட்டிணன், தியாகு, வழக்கறிஞர் பவானி மோகன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை விரைந்து வழங்க வேண்டும். தமிழக அரசு 161வது சட்ட பிரிவை பயன்படுத்தி இவர்களின் விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும். அதற்காக இன்றிலிருந்து 100 நாட்கள் காத்திருப்பது என்றும் தாமதமானால் அடுத்தகட்ட ஜனநாயக போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது அகமது பாரூக் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.