காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு இன்று கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை துவங்க இருக்கிறார். இதன் காரணமாக நேற்று சென்னை வந்த ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி சென்றார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா மண்டபத்தையும் சீரமைப்பு பணிகள் நடைபெறும் திருவள்ளுவர் மண்டபத்தையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மண்டபத்தையும் காந்தி மண்டபத்தையும் பார்வையிட்ட ராகுல் காந்தி, காந்தி மண்டபத்தில் நடைபெறும் சிறிய பஜன் செய்யும் வழிபட்டு முறையில் கலந்து கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்றார்.
இதன் பின் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் கதரால் செய்யப்பட்ட தேசியக் கொடி வழங்கி நடைபயணத்தை துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக இந்த நடைபயணம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும். அங்கு ராகுல் காந்தி உரையாற்ற இருக்கிறார்.
நடைபயணம் மேற்கொள்ளப்படும் இடத்தில் பாதுகாப்பிற்காக தமிழக காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் கிட்டத்தட்ட 2500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி துவக்க இருக்கும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வடமாநிலத்திலிருந்தும் தொண்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர்.