ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 9 ஆம் தேதி (09.11.2024) அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று (12.11.2024) நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துகிறது. இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்று, நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.