சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து விடுவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப். 8 ஆம் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணிக்கு சசிகலா தமிழகம் கிளம்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே சென்றபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறித்து சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சேலம் நகர அதிமுக நிர்வாகிகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் மீண்டும் டிஜிபியை நேரில் சந்தித்து அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது எனப் புகாரளித்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமையகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு போடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் போலீசார் தொடர்ந்து தீவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.